சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளான் நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இதனிடையே, நேற்று (மார்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இதில், முதல் நாளான நேற்று, முதலில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
இதனிடையே, நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் மற்றும் பாபநாசம் எம்எல்ஏ எம்.எச். ஜவஹிருல்லா, தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதை நினைவு கூர்ந்தார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையிலும், நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை அழிக்க சில சக்திகள் முயல்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார். ஹிஜாப் அணிவது தொடர்பாக முதலமைச்சர் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.