சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகத் திகழ்பவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தலைமுறையினர் கடந்தும் கொண்டாடப்படுபவர். ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாத புகழுடன் தமிழ் சினிமாவில் உலா வருபவர். சமீப காலமாக, ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்’. இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படக்குழு “ப்ரோமோவுக்கு ப்ரோமோ” என்று வித்தியாசமான முறையில் படத்தின் காவாலா பாடலை வெளியிட்டது. அதன் பின் சமீபத்தில் படத்தில் இருந்து 2வது பாடலாக ஹுக்கூம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த இரண்டு பாடல்களும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளன. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு மொழிகளில் இருந்து முன்னணி நடிகர்கள் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளதால், இது எது மாதிரியான படம்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நெல்சன் படங்கள் எப்போதுமே டார்க் காமெடி வகையில் இருக்கும். ஆனால், இது ஆக்சன் வகையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவருக்குமே இந்த படம் முக்கியமான படமாகும். அதனால் எப்படியாவது படத்தை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் உழைத்துள்ளனர்.
இந்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனாலும் படத்துக்கு போதுமான ப்ரொமோஷன் இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. ரஜினி படமாக இருந்தாலும் இன்றைய காலத்தில் விளம்பரப்படுத்துவது மட்டுமே ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவைக்கும்.
இதனால் சன் பிக்சர்ஸ் மீது ரஜினி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இவ்விழாவில் பல்வேறு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘டார்க் காமெடி என்ற பெயரில் நான் நடித்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை’ - நடிகர் சந்தானம்!