சென்னை: ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுகளின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைமையிலான போராட்டம் வாக்காளர் சிறப்பு முகாம் காரணமாக வரும் டிசம்பர் 9ஆம் தேதி அன்று நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
கடந்த ஆட்சியின் போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது, அப்போதைய எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்ததுடன், திமுக ஆட்சிக்கு வந்த உடன் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை.
இதன் காரணமாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர், புதிய ஒய்வூதையத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதையத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், தொகுப்பூதிய, தினகூலிப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழுவின் கூட்டமானது நேற்று (நவ.20) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஏற்கனவே கடந்த 18.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 25.11.2023 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 18, 19 தேதிகளில் நடைபெற இருந்த எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம், வரும் 25, 26 தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் பெரும்பான்மையாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் அரசு ஊழியர் பணியாளர்களும் பணியாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிக்கப்பட்டவர்கள் இப்பணியிலிருந்து எந்த வகையிலும் விலக்கு பெற இயலாது.
இதன் காரணமாக, ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைநகரங்களில் 25.11.2023 அன்று நடைபெற இருந்த மறியல் போராட்டத்தினை எதிர்வரும் 9.12.2023 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 28ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டமளிப்பு விழா மேடையில் ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!