ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கடந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 (பி) குற்ற குறிப்பாணைகள், 1500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையிலுள்ளது.
இதனால் பதவி உயர்வு, பணி ஓய்வும், பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கவேண்டிய ஓய்வூதிய பலன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த 17(பி) குற்ற குறிப்பாணையை ரத்துசெய்வது, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முதலமைச்சர் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்களை 24ஆம் தேதி சந்தித்து மனுவளிக்கவுள்ளதாகவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒழுங்கு நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு, மாயவன், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் கூடி ஆலோசனை செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கலாம் நினைவிடம் அருகே மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு