புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (பிப். 8) தொடங்கினர்.
அதற்கு அனுமதி இல்லை என காவல் துறையினர் தெரிவித்து, அவர்களைக் கைதுசெய்து சேப்பாக்கம் எழிலகத்தில் தங்கவைத்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு 12 மணி அளவில் அவர்களை காவல் துறையினர் விடுவித்தனர்.
அப்பொழுது அங்கேயே ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் தங்களின் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜாக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் பேசுகையில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்டவற்றில் சிறப்பு ஊதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை காலமுறை ஊதியத்தில் நியமனம்செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடிவருகிறோம்.
எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது.
எனவே அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அல்லது அரசு ஊழியர்கள் தேர்தலில் தங்கள் எதிர்ப்பினை தெரிவிப்பார்கள். ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை (பிப். 10) கூடி முடிவுசெய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வஞ்சிக்கப்படும் ஆசிரியர்- உறுதுணையாக இருந்து சக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!