சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று (டிச.28) சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இடையே தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கைகளைத் தெரிவிக்கச் சென்றனர்.
போராட்டம் குறித்துப் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், “எங்களுடைய பிரதான கோரிக்கை என்பது தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
சிறப்புக் காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி துணைச் செயலாளர், எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்குக் காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தவிருந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது 3 அமைச்சர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் பேச்சு வார்த்தையின் போது கூறப்பட்ட போது ஏதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. இதன் காரணமாக இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் போல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றித் தர வேண்டும். ஒரு வேளை கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் மாநில உயர்மட்டக் குழு கூட்டி அடுத்த கட்ட போராட்டத்தைத் தீவிரமாக நடத்தும்”எனக் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நாயகன் விஜயகாந்த் செய்த சாதனைகள்..!