சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின், உயர்மட்ட குழுக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இன்று(டிச.07) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர்களான மாயவன்,செல்வம், மயில் ஆகியோர் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது,“ ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
திமுக அதன் தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கையினை இடம்பெறச் செய்தனர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் எங்களின் கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்று 32 மாதங்கள் கடந்த பின்னரும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. எனவே கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினோம். ஆனாலும் எங்களின் கோரிகை நிறைவேற்றப்படவில்லை.
- 22.01.2024 முதல் 24.01.2024 ஆகிய மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம் நடத்துவது.
- 30.01.2024 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது.
- 05.02.2024 முதல் 09.02.2024 முடிய அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது (பி.ஜே.பி தவிர்த்து).
- 10.02.2024 அன்று மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது.
- 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது.
- 26.02.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளோம்.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள அரசாக இருந்தால் எங்களை அழைத்துப் பேச வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை இருப்பதால் தான் ஆசிரியர்கள் 32 மாதமாகப் பொறுமையாகக் காத்திருந்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற வில்லை.
அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் பொதுத் தேர்வைப் புறக்கணித்தும் போராட்டத்தைத் தொடர்வோம். திமுக அரசின் செயல்பாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனில் பூஜ்ஜியமாகத் தான் உள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவு வருகிறது” என தெரிவித்தனர். மேலும் போராட்டத்தினால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பொறுப்பல்ல அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை - நடிகர் விஜய் சேதுபதி