சென்னை: அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக இரண்டாம் முறையாக ஒருமனதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உங்களில் ஒருவனான என்னை, தமிழர்களின் சுயமரியாதையையும் தமிழ்நாட்டின் நலனையும் காக்கின்ற நமது திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கும் திமுகவின் கோடானு கோடி தொண்டர்களுக்கு இந்நல்வாய்ப்பில் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை முதலில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இது பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்த இடம். நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கோலோச்சிய இடம். நான் அண்ணா அல்ல. நான் கலைஞர் அல்ல. அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கலைஞர் அவர்களால் 'உழைப்பு - உழைப்பு - உழைப்பு' என்று பாராட்டு பெற்ற காரணத்தால் கிடைத்த, இந்தப்பொறுப்பு என்ற தன்னடக்கத்தோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் எழுபது ஆண்டு காலமாக, ஏற்றத்தோடு மலர்ச்சியோடு பாடுபட்டு வரும் திமுகவின் இதயமாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகளோடு இரண்டாவது முறையாக நான் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்.
உங்கள் அனைவரையும் கோடிக்கணக்கான தொண்டர்களின் வடிவங்களாகவே நான் காண்கிறேன். கழகமே தங்களது மூச்சும், பேச்சும் என வாழ்ந்து வருபவர்களின் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் நான் என்றென்றும் உண்மையாக இருப்பேன் என்ற உறுதிமொழியோடு எனது உரையை நான் தொடங்குகிறேன்.
இங்கு கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் கோடிக்கணக்கான தொண்டர்களின் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளீர்கள். ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டாயிரம் பேருக்குச் சமம். ஏறத்தாழ ஒரு கோடித் தொண்டர்களின் முகமாகவும், முகவரியாகவும் இங்கே கூடியிருக்கிறீர்கள்.
கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், மதிப்பிற்குரியவர்கள், மரியாதைக்குரியவர்கள், மாண்புக்கு உரியவர்கள், சிறப்புக்கு உரியவர்கள். பதவிக்கு, பொறுப்புக்கு, வந்தவர்கள் மட்டுமல்ல, திமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு உடன்பிறப்பும் கழகத்தில் மதிப்பிற்கு உரியவர்கள். அவர்களால் தான் நான் தலைவராகி இருக்கிறேன். நீங்கள் மாவட்டக் கழகச் செயலாளர்களாக, பொதுக்குழு உறுப்பினர்களாக வந்துள்ளீர்கள்.
கொள்கை உரமும், அதனை அடையும் இயக்கத்துக்குத் தொண்டர்கள் பலமும் திமுகவுக்கு இருப்பதால்தான் எழுபது ஆண்டுகளாக கழகம் தோன்றிய காலத்தில் எத்தகைய உணர்ச்சியும் சுறுசுறுப்பும் இருந்ததோ அதே சுறுசுறுப்போடு நாம் இயங்கி வருகிறோம். பேரறிஞர் அண்ணா நம்மை விட்டுச்சென்றார்கள். அண்ணனுக்கு அண்ணனாக இருந்து கழகத்தைக் காத்தார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்களும் நம்மிடமிருந்து விடைபெற்றுச்சென்றபோது, இந்த எளியேன் தலையில் தலைமைப்பொறுப்பு சுமத்தப்பட்டது.
ஐம்பது ஆண்டுகாலம் கழகத்தை எத்தகைய சூழலிலும் வளர்த்துக்காத்த கலைஞரின் கறுப்பு சிவப்புப் படையை வழிநடத்தும் பொறுப்பை நான் ஏற்றேன். நான் ஏற்றேன் என்றால் என்னை நம்பி மட்டுமல்ல, உங்களை நம்பித்தான் ஏற்றேன். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தைரியத்தில்தான் பொறுப்பை ஏற்றேன். அன்று முதல் நமக்கு ஏறுமுகம் தான்!
எல்லோரும் குறிப்பிட்டார்களே, கிராமப்புற உள்ளாட்சித்தேர்தலில் வென்றோம். நாடாளுமன்றத்தேர்தலில் வென்றோம். சட்டமன்றத்தேர்தலில் வென்றோம். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வென்றோம். வெற்றிச் செய்தியைத் தவிர நமது காதுகள் வேறு எதையும் கேட்கவில்லை. அந்தளவுக்கு வெற்றிக் கோட்டையினைக் கட்டி வைத்துள்ளோம். இந்த மூன்றாண்டு காலம் என்பது திமுகவிற்கு முன்னேற்றமான காலம்தான் என்பதை முதல் முறை தலைவராக ஆனது முதல் இன்று வரை நிரூபித்து வருகிறோம்.
இரண்டாவது முறையும் உங்களின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உங்களுக்குப் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளேன். இது நீங்கள் எனக்கு இட்டுள்ள கட்டளை. இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிதலே எனது சிந்தனை. கழகத்தின் 15-ஆவது பொதுத்தேர்தல் இது. கிளைக் கழகம், பேரூர் கழகம், ஒன்றியக் கழகம், நகரக் கழகம், வட்டக் கழகம், பகுதிக் கழகம், மாநகரக் கழகம் மற்றும் மாவட்டக் கழகம் ஆகிய நிலைகளில் கழகத்தில் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். மூன்றாண்டு காலத்துக்கு ஒருமுறை, முறைப்படி தேர்தலை நடத்தி வருகிறோம். 15-ஆவது கழகப் பொதுத்தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடித்துவிட்டோம் என்பதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கழகத்தின் பல பொறுப்புகளுக்குப்போட்டிகள் இருந்தது உண்மைதான். போட்டி போடுகிறார்கள் என்றால் பதவிக்காக அல்ல. உழைப்பதற்கு, பொறுப்பேற்றுச்செயல்படுவதற்குப்போட்டி போடுகிறார்கள் என்ற வகையில் எனக்குப் பெருமையாகவே இருந்தது. சில சலசலப்புகளைத் தவிர, இந்த உட்கட்சித்தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
தலைமைக் கழகத்தின் சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டு, தலைமைக்கழகத்தின் வழிகாட்டுதல்படி, கிளைக் கழகம் முதல் பகுதிக்கழகம் வரையிலான தேர்தல்களை அமைதியாக நடத்திய தலைமைக்கழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையாளர்கள் அனைவர்க்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சில இடங்களில் ஏற்பட்ட வாக்குவாதங்கள், மனவருத்தங்கள், ஆகியவற்றை அமைதியாகச்சமாளித்து தேர்தலை நடத்தி முடித்து தலைமைக்குப்பெருமை சேர்த்துள்ளீர்கள். இதுதொடர்பான சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் தலைமைக்கழகத்தில் அமர்ந்து அதனைத்தீர்த்து வைத்த நம்முடைய முதன்மைச்செயலாளர் நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோருக்கு நான் எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதன்தொடர்ச்சியாக மாவட்டக் கழகத் தேர்தல் நடந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், ஒருவருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்தும், மாவட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். அதாவது பொறுப்புகள் தகுதியானவர்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
போட்டி நடப்பது மட்டுமல்ல, விட்டுக்கொடுப்பதும் ஜனநாயக நடைமுறைகளில் ஒன்றுதான் என்றார் நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். அந்த வகையில் நமது நிர்வாகிகள் நடந்து கொண்டார்கள். மாவட்டக் கழகச்செயலாளர்கள் தேர்தலில் மோதல் நடக்கும், சலசலப்பு இருக்கும் என "பார்த்தீர்களா?. திமுகவின் வன்முறைக் கலாச்சாரத்தை!" என்று எழுதலாம் எனத் துடித்த சில பாரம்பரிய பத்திரிகைகளின் ஆசையில், மண் விழுந்தது. நம்முடைய மாவட்டக் கழகச்செயலாளர்களின் பதவிப்போட்டிகள் சுமுகமாக முடிந்தன.
உடனே, 'திமுகவில் ஜனநாயகம் இல்லை' என்று எழுதத்தொடங்கி விட்டார்கள். என்னை விட, உங்களை விட இந்த நாட்டில் சில பத்திரிகைகள் அதிகப்படியான திமுக பாசம் கொண்டு செயல்படுவதைப் பார்க்கிறோம். சொல்கிறார்கள், ஸ்டாலின் யாரையும் மாற்றவில்லை என ஒரு பத்திரிகை எழுதுகிறது. சிலர் மாற்றப்பட்டுள்ளார்கள் என்று இன்னொரு பத்திரிக்கை எழுதுகிறது. இதைப் படிப்பவர்கள்தான் பாவம், தலைசுற்றிக் கீழே விழுவார்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள்தான் அடிக்கடி சொல்வார்கள், 'கருணாநிதி வாழ்க என்றாலும், கருணாநிதி ஒழிக என்றாலும், கருணாநிதி என்று சொல்வது எனக்குப் பெருமைதான்' என்று சொல்வார்கள். அந்த மாதிரி திமுக பழுத்த மரமாக இருப்பதால்தானே கல்லெறிகிறார்கள். திமுக பழுத்த மரம் மட்டுமல்ல; கற்கோட்டை வீசப்படும் கற்களை வைத்தே கோட்டை கட்டும் ஆற்றல் பெற்றவர்கள் நாம். நமது கோட்டை மீது கல் வீசினால் கோட்டை பலம் பெறுமே தவிர, பலவீனம் அடையாது.
15ஆவது தேர்தல் என்பது பல மடங்கு பலத்தை நமக்குக் கொடுத்துள்ளது. பல்வேறு பொறுப்புகளுக்கு தகுதி படைத்த பல லட்சம் பேர் இருக்கிறார்களே என்ற மகிழ்ச்சியை இந்தத் தேர்தல் எனக்கு அளித்துள்ளது. இந்த அரங்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒன்றைச்சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
புதிய நிர்வாகிகள் பலர் வந்துள்ளீர்கள். பழைய நிர்வாகிகள் பலரும் இருப்பீர்கள். காலம் உங்களுக்குச்சில கடமைகளைச் செய்வதற்குக் கொடையாக இந்தப்பொறுப்புகளை வழங்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நாம் மட்டுமே தகுதி படைத்தவர்கள், நம்மைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் இந்தப்பொறுப்புக்கு வந்துவிட்டோம் என யாரும் நினைக்க வேண்டாம்.
நம்மைப்போல லட்சக்கணக்கான தோழர்கள், தொண்டர்கள், இந்தத் தமிழினத்துக்கு உழைக்க சுயமரியாதையைக் காக்க காத்திருக்கிறார்கள். நாம் பொறுப்புக்கு வந்திருப்பதால், அவர்கள் நம் தோளோடு தோள் நின்று களப்பணியாற்ற இனமானம் காக்க துணைநிற்கப்போகிறார்கள். எனவே, நமது பொறுப்பும் கடமையும் மிகமிகப் பெரியது. அதனை மறந்துவிடாதீர்கள்.
எந்தப்பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படிப்பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் பொறுப்புகள் தொடரும். மறந்துவிடாதீர்கள். கடந்த பத்தாண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் சிலர் தொடரட்டும் என்று தலைமைக்கழகத்தின் சார்பில் நாங்கள் முடிவெடுத்தோம். அப்போது கூட நம்முடைய முதன்மைச்செயலாளர் நேரு அவர்கள் என்னிடம், நீங்க ரொம்ப Soft ஆயிட்டீங்க தளபதி' என்று சொன்னார்.
எனவே இரக்கத்தால் கூட சிலருக்குப்பொறுப்புகள் நீட்டிக்கப்பட்டு இருக்கலாம். இதன் காரணமாகப் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். நான் மறுக்கவில்லை. அப்படி வாய்ப்பைப்பெற முடியாதவர்கள் வருந்தவேண்டாம். வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படவுமில்லை, அவர்கள் மறக்கப்படவுமில்லை என்பதை தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் எடுத்துச்சொன்னதாக நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
பொறுப்பில் அவர்கள் உட்கார வைக்கப்படவில்லை என்றாலும் கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. புதிய நிர்வாகிகள், பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் அரவணைத்துச்செல்லுங்கள். அனைவர் ஆலோசனையையும் பெறுங்கள்.
சிலர் மற்ற நிர்வாகிகளோடு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்று சில நேரங்களில் நான் கேள்விப்படுகிறேன். இதைவிட கட்சித்துரோகம் எதுவும் இருக்க முடியாது. இப்படி சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுவது கழகத்தின் வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும். கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை பொறுப்புக்கு வந்துள்ள உங்கள் அனைவரது செயல்பாடுகளும் தலைமைக் கழகத்தின் சார்பில் கண்காணிக்கப்படும்.
தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்துங்கள். கிளை, வட்டக்கழகத்தின் சார்பில் எத்தனை பொது உறுப்பினர்கள் கூட்டங்கள் நடத்துகிறீர்களோ, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகத்தின் சார்பில் எத்தனை செயற்குழு கூட்டங்களை நடத்துகிறீர்களோ அதுதான் கழகத்தை வலிமைப்படுத்தும். தலைமைக்கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் கூட்டங்களை மட்டுமே, நம்முடைய அமைப்புகள் நடத்தினால் போதாது. தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களை நீங்களே நடத்துவதன்மூலமாக நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
இதற்கான மினிட் புத்தகங்களை அறிவாலயத்தில் நானே தொடர்புகொண்டு, உங்களை கொண்டு வரச்சொல்லி பார்க்கப் போகிறேன். பொறுப்புக்கு வந்தவர்களின் முதலாவது செயல்பாடு என்பது இதுதான். அதேபோல், கழகத்தில் எத்தனையோ அணிகள் இருக்கின்றன. அந்த அணிகளுக்கும் மாவட்ட வாரியாக, நிர்வாகிகளைப் போடுகிறோம். இத்தகைய அணிகளும் தங்களது அணிகளின் சார்பில் எத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க இருக்கிறேன். இத்தகைய அணிகள் சுதந்திரமாகச்செயல்படுவதற்கு மாவட்டக்கழக நிர்வாகிகள் வழிவிட்டு, அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். மறந்துவிடக்கூடாது.
பொறுப்புக்கு வந்த அனைவரும் செயல்பட வேண்டும். தேரை வலிமையான தோள்களுடன் சிலர் இழுத்துச் செல்வார்கள். சிலர் வெறுமெனே கையை வைத்திருப்பார்கள். அப்படி சும்மா கையை வைத்தபடி உங்களில் யாரும் செல்லக் கூடாது. அனைவரும் சேர்ந்து கழகத்தை வலிமைப்படுத்த முன்னோக்கி இழுத்துச்செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுகவின் உட்கட்சி பூசலைப் பயன்படுத்தி பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இப்பொழுது காலையில் எழுந்திருக்கும்பொழுது அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏதாவது செய்துவிட்டார்களா என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. தற்போது இருக்கக்கூடிய சூழலில் மூன்றாவது கண்ணாக செல்போன் வந்துவிட்டது. நாம் பேசியதை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் பரப்புவதற்குத் தயாராக இருக்கின்றனர்.
கொள்கை சார்ந்த அரசியலை நம்மிடம் செய்யமுடியாமல், இது போன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நமது கொள்கைகளை இன்னும் வரக்கூடிய இளைஞர்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
அதற்காக பெரிய பொதுக்கூட்டங்கள் போட வேண்டிய அவசியம் இல்லை. திண்ணை பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ பகிர்வு போன்ற நிகழ்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். அதற்காக உழைக்கத் தயாராக வேண்டும்" எனக்கூறினார்.
இதையும் படிங்க: 'அப்பாவி இந்துக்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்; ஜெ. மீது மதிப்புள்ளவர்கள் பாஜகவை கைவிடுங்கள்'