இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே. பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தி வந்த 'ஹைட்ராக்சி குளோரோகுயின்' அத்தியாவசிய மருந்தைப் பரவிவரும் கரோனா நோய்த் தடுப்புக்காகவும், நாட்டு மக்களின் நலன் கருதியும் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்குப் பணிந்து தடையை பிரதமர் மோடி தளர்த்தியுள்ளார்.
அவரின் இந்த முடிவால் தேசத்தின் 130 கோடி மக்கள் வெட்கித்தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஒரே ஒரு மிரட்டல் அறிக்கைக்குப் பணிந்து இந்திய அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்தியிருப்பது வியப்பை அளிக்கிறது.
கொடிய கொள்ளை நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி நாட்டு மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பேரபாயத்தை புறந்தள்ளி, அமெரிக்க நண்பரை மகிழ்விக்க வேண்டி தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தேசத்திற்கு அபாயமாக முடியும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களின் உடல்நலம், பாதுகாப்பைப் புறக்கணித்து, நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்தை சரணடையச் செய்வது மிகத்தவறான நடைமுறையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் புலிக்கு கரோனா தொற்று!