திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் ஏ.வ. வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.
பிரபல கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 3) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவ. 6) 4வது நாளாக வருமான வரித்துறை அதிகரிகளின் சோதனை தொடர்ந்து வருகிறது. அமைச்சர் ஏ.வ. வேலுவின் மகன் வீடு, மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுவின், அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களிலும் இன்று (நவ. 6) நான்காவது நாளாக வருமான வரித் துறை சோதனை நீடித்து வருகிறது. அதேபோல் கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டிலும் சோதனை தொடருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு சில இடங்களில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவு!