சென்னை: ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப், சென்னை வடபழனியில் அமைந்துள்ள கார்ப்பரேட் அலுவலகத்தை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பத்து மாநிலங்களில், குறிப்பாக 6 மெட்ரோ நகரங்கள் உள்பட மொத்தம் 86 கிளைகளில் ஆர்த்தி ஸ்கேன் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 65 கிளைகள் உள்ளன. இதன் உரிமையாளர் கோவிந்தராஜன் என்பவரும், நிர்வாகிகளாக பிரசன்னா மற்றும் ஆர்த்தி பிரசன்னா ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜூலை7) காலையில் இருந்து தமிழ்நாட்டில் மட்டும் குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் தொடர்பான 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
முக்கியமாக, ஆர்த்தி ஸ்கேன் கிளைகள் செயல்படும் இடங்களிலும் மற்றும் அதில் பணிபுரியும் சில மருத்துவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதிலும், சென்னையில் உள்ள வடபழனி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் மற்றும் தஞ்சை மணி மண்டபம் அருகில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி நிறுவனர் கோவிந்தராஜன் வீடு, ஆர்த்தி திருமண மண்டபம், நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆர்த்தி சி.டி ஸ்கேன் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்த வருமான வரி சோதனைக்கு முக்கிய காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் ஸ்கேன்கள், பரிசோதனைகள் ஆகியவற்றை தனியார் ஸ்கேன் சென்டர்களில் மேற்கொண்டுள்ளனர். இதில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் அதிக அளவு ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதை முறையாக கணக்குக் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்தச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குறுகிய காலத்தில் அதிக அளவு கிளைகளை திறந்து பெருமளவு முதலீடு செய்ததும் பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரபல நிறுவனம் ஒன்று ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வருமான வரி வழக்குகள்: எஸ்.ஜே. சூர்யா மனுக்கள் தள்ளுபடி