சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களை சப்ளை செய்யக்கூடிய ராதா இன்ஜினியரிங் மற்றும் அதனுடைய கிளை நிறுவனங்கள் என தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா சாலையில் இருக்கக்கூடிய மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி கட்டுப்பாட்டாளராக பணியாற்றும் காசி என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (செப்.20) சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் போது கூடுதல் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படைகளின் காவலில் மின்சார ஊழியரான காசியின் வீட்டின் வருமான வரித்துறை அதிகாரிகளின் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிய போது, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இருந்த நெருங்கிய நபர்களில் காசியும் ஒருவர் என விசாரணையில் தெரிய வந்தது.
செந்தில் பாலாஜி அமைச்சராக பதவிவகித்த போது, இவர் மூலமாக விடப்பட்ட டெண்டர்கள் உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்ட நிறுவனங்கள் என முக்கிய முடிவுகளை எடுப்பதில் காசியின் பங்கு மிக முக்கியமாக இருந்துள்ளது. அதன் அடிப்படையிலே பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்கள் தொடர்பாக காசிக்கு சம்ந்தப்பட்ட இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர் வருமானவரித்துறை அதிகாரிகள்.
கடந்த 10 ஆண்டுகளாக ராதா இன்ஜினியரிங் நிறுவனம், தொடர்ந்து அரசு மின்வாரிய டென்டர்களை எடுத்து வந்துள்ளது. இந்த டென்டர்களை இந்த நிறுவனத்திற்கு வழங்குவதற்கு காசி முக்கிய நபராக செயல்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. அதனை அடிப்படைக் காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு இவரது இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!