சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான அபிராமி ராமநாதனின் போயஸ் கார்டன் அலுவலகம், மயிலாப்பூர் இல்லம், மற்றும் அவரின் மேலாளர் மோகன் என்பவர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று நள்ளிரவில் அபிராமி ராமநாதனின் மேலாளர் மோகனின் மந்தவெளி இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது. இந்த நிலையில் மயிலாப்பூர் பகுதியில் அபிராமி ராமநாதன் வீட்டிலும், போயஸ் கார்டனில் உள்ள அலுவலகத்திலும் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
மேலும் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமாக புரசைவாக்கம் பகுதியில் இருந்த பிரபல அபிராமி திரையரங்கம் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடம் தற்போது வேறொரு பிரபல நிறுவனத்திற்கு கைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அபிராமி ராமநாதனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அபிராமி ராமநாதனுக்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டன் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் அன்னை அபிராமி பேப்பர் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விவரங்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள தேவை இருந்தால் அபிராமி ராமநாதனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனுக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவ.22 வரை நீட்டிப்பு!