சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு(varisu). இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள EVP பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பில் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 5 யானைகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் வனத்துறை தரப்பில், 5 யானைகள் உரிய கண்காணிப்புடன் படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என தெரிவித்துள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள ஆவணத்தில், ஒரே ஒரு யானைக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஜெயா (24) என்ற பெண் யானையை, நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள நான்கு யானைகளுக்கு இதேபோல் ஆவணங்கள் வெளியிடவில்லை. எனினும் இந்த யானைகள் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வனவிலங்கு ஆர்வலர் வனம் ச.சந்திரசேகர் கூறுகையில், "யானைகளை இது போன்ற படப்பிடிப்புக்காக அனுப்பப்படுவதே தவறு. மேலும், அப்படி படப்பிடிப்புக்காக அனுப்பினால் கூட வன அலுவலர்கள் அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த படப்பிடிப்பில் கூட எந்த ஒரு வன மருத்துவரோ அல்லது அலுவலரோ யானைகளை கண்காணிக்கவில்லை என தெரிய வருகிறது” என தெரிவித்தார்.
மேலும்ம் இந்த யானைகள் நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நடைபெற உள்ள கஜபூஜைக்காக அழைத்து செல்லப்படுகிறது என ஆவணம் தெரிவிக்கிறது. ஆனால் தற்போது வாரிசு திரைப்பட படப்பிடிப்பிற்கு சென்றது என தெரிய வந்துள்ளது என தெரிவித்த வன ஆர்வலர், இது குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் யானைகளுக்கு போக்குவரத்து அனுமதி வழங்கிய பிறகு விலங்கு நல வாரியத்தால் கண்காணிக்கப்பட்டாலும் சம்பத்தப்பட்ட வனத்துறை அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ.அசோக சக்கரவர்த்தி கூறும்போது, “பொதுவாக விலங்குகளை தங்களது வாழ்விடத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவது அவைகளுக்கு மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும்.
விலங்குகள், குறிப்பாக யானைகளை கோயில்களில் வளர்ப்பதே தவறு. மேலும் யானைகளை படப்பிடிப்பிற்காக பயன்படுத்துவது மிகப்பெரிய குற்றமாகும். ஏனெனில் இந்த நேரங்களில் யானைகளை யாரும் கண்காணிக்க மாட்டார்கள். விலங்குகளை எந்த வித வணிக ரீதிக்காகவும் பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இது குறித்து தமிழக தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி கூறுகையில், படப்பிடிப்புக்கு 5 யானைகள் பயன்படுத்தப்பட்டது. 5 யானைகளுக்கு போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டது. படப்பிடிப்பின்போது நடக்கும் உண்மையான நடவடிக்கைகள் விலங்கு நல வாரியத்தால் கண்காணிக்கப்பட்டது" என தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொலைபேசி வாயிலாக நம்மிடம் கூறுகையில், "யானைகள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்துவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.
யானைகளை போக்குவரத்து அனுமதி கொடுப்பதற்கு முக்கிய நெறிமுறைகள்:
- யானையை வண்டியில் ஏற்றப்படும் முன்னர் உரிய முறையில் உணவும் தண்ணீரும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
- யானையை தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் நடக்க வைக்க கூடாது.
- யானையை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.
- யானைகளை ஊர்வலத்துடன் கூடிய பொதுக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- பதற்றப்படும் அல்லது உணர்ச்சி வசப்படும் யானைகளை கட்டுப்படுத்த கால்நடை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மயக்க மருந்தை தேவைப்பட்டால் மட்டும் செலுத்த வேண்டும்.
- முதிர்ந்த கர்ப்ப நிலையில் உள்ள பெண் யானைகளை லாரிகள் மூலம் கொண்டு செல்லக்கூடாது.
இதையும் படிங்க: 'வாரிசு' படக்குழு மீது இந்திய விலங்கு நல வாரியம் பரபரப்பு புகார்