சென்னை: சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறப்பு அம்சங்களுடன் பெண்களால் இயக்கப்படும் முன் மாதிரியான டீ கடையை அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எம்.சி. சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "ரஜினிகாந்த் உடல் நிலையை கருத்தில்கொண்டு தனது அரசியல் முடிவை அறிவித்துள்ளார். இதனால், அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்நாடு மக்களுக்கும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளை படைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் திமுகவிற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் ரஜினிகாந்த், என்றும் மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் ஆதரவு அளிப்பார். அவர் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது அதிமுகவை அல்ல எனவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். தற்போதைய கூட்டணி கட்சியில் உள்ள அனைவரும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளனர்.
கட்சிகளுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2021இல் ஒரு மெகா கூட்டணி அமைத்து வெற்றி கொடியினை அதிமுக தமிழ்நாட்டில் நாட்டும். கூட்டணி இறுதி செய்யப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்தான முடிவினை தெரிவிப்போம்.
முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு, மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாமே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.
இதையும் படிங்க: 'என்னை மன்னியுங்கள்' - ரஜினிகாந்த்!