சென்னை: நாம் தழிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அயோத்திதாச பண்டிதரின் 108ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னையை அடுத்த தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்பு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள்: தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் பல்லக்கு தூக்கினார்கள். தற்போது மனிதனை மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. பட்டினப்பிரவேசம் என்பதையே நான் ஏற்கமாட்டேன். மீண்டும் மீண்டும் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவது ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மனிதனை மனிதன் சுமப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது” என்றார். மேலும் அவர் ’மதுரை ஆதீனமோ பொன்னம்பல அடிகளாரோ பல்லக்கில் போவார்களா? நிச்சயம் போகமாட்டார்கள்’ என்றார்.
சிங்களர்களுக்கு உதவுவதைத் தடுக்கவில்லை: இலங்கைத் தமிழர்கள் குறித்துப் பேசிய சீமான், 'தமிழர்களுக்கு உதவ நாம் தமிழர் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை திரட்டிக்கொண்டு இருக்கிறோம். அதை முறைப்படி கொண்டுபோய் சேர்ப்போம். தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது இலங்கைத் தமிழர்களுக்கு போய் சேரும் என்பதை உறுதி செய்ய வேண்டும். சிங்களர்களுக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழர்களுக்குப் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்' என்றார்.
இதையும் படிங்க: 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் : அமைச்சர் கே.என்.நேரு