சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் விதத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும் மனசாட்சி உள்ளவர்கள் மாற்று கருத்தை பதிவிட முடியாத வகையில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு பழரசம்: மேலும் சட்டமன்ற அறிவிப்பு இல்லாமல் 30 க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தியுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் சாமி தரிசனம் செய்ய வெயிலில் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் கபாலீஸ்வரர் கோவிலில் மூடுபனி அமைப்பிலான நீர் தெளிப்பான்கள் அமைக்கபட்டுள்ளது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் அதிக பக்தர்கள் கூட்டம் வரும் கோவில்களில் அமைக்கப்படும்.
தற்போது கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னை தமிழில் அர்ச்சனை: மேலும், முடிந்தவரை அனைத்து கோவில்களிலும் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை தொடங்க இருந்தாலும், இது கட்டாயம் அல்ல. தற்போது வரை 48 கோவில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சனை செய்வது கடினம். எந்தெந்த கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வாய்ப்புள்ளதோ அந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது 44,000 கோயில்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு 2000 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம் தொடங்குவதற்காக 40 கோடி ரூபாய் நிதி சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. 10,150 அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் என்பது முதன் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
5 பேர் கொண்ட குழு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கரோனா தொற்றுக்கு பின் கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீச்சகர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை என்றும், பல்வேறு முறைகேடுகள் கோவிலில் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. ஆனால், இவ்வாறு வந்த புகார்களுக்கு ஆதாரம் இல்லை. அதேநேரம் அதனை விசாரிப்பது அரசின் கடமை. எனவே புகார்களை விசாரிப்பதற்கு இணை ஆணையர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மிக விரைவில் இந்த 5 பேர் கொண்ட குழு கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது” என சேகர்பாபு கூறினார்.
இதையும் படிங்க: BUDDHA PURNIMA 2022: மனித குலத்துக்கு வழிகாட்டிய புத்தர்!