ஆதம்பாக்கத்தில் ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம், நியூகாலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் சாய்அரவிந்த் (23), தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று (நவ.24) வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆதம்பாக்கம் காவல் துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சாய் அரவிந்த் கடந்த சில நாட்களாக பணிச்சுமை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சாய் அரவிந்திற்கு, ‘ஆன்-லைன்’ மூலம் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. அப்படி விளையாடும்போது திரையில் பளிச்சிடும் விளம்பரங்களை பார்த்து, அதன் மூலம் ஆப் வழியாக கடன் பெற்றுள்ளார். கொடுத்த கடனை அநாகரீகமான முறையில் திரும்பி கேட்டதால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பட்டப்பகலில் எம்என்எஸ் கட்சி தலைவர் சுட்டுக்கொலை... சிசிடிவி காட்சி வெளியீடு!