சென்னை: சென்னை குரோம்பேட்டை அடுத்த போஸ்டல் நகர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் சொந்தமாக தண்ணீர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி தேன்மொழி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் காணாமல் போனது. இதையடுத்து அவர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஐடியில் பணிபுரியும் தேன்மொழியின் சகோதரர் ஆதி நாராயாணன் (26) காரை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆதி நாராயணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நன்மங்கலம் ஏரிக்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஆதிநாராயணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது தந்தை சொத்துகள் அனைத்தையும் சகோதரியின் பேரில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டதால், சகோதரியை பழிவாங்குவதற்காக காரை திருடியதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஆதிநாராயணன், அரவிந்தன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கத்தியுடன் கெத்து காட்டிய 6 பேர் கைது!