சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், '' நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்கள் வெங்காயம் தட்டுப்பாடு குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் நான் வெங்காயம் சாப்பிடவில்லை எனக்கூறியது வேடிக்கையாக உள்ளது. அதில் சாதி, மதம் ஆகியவை புகுத்தி விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
மத்திய அமைச்சராக இருப்பவர் என்ன சாப்பிடுகிறார் என்பது முக்கியமில்லை; மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதே முக்கியம். அதற்கு தகுந்த பதிலை அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டார். அவர் இதுபோல பொறுப்பற்றத்தனமாக பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்.
குளறுபடிகள் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது ஊரக பஞ்சாயத்துக்கு மட்டும் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனினும், ஒட்டுமொத்தமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
கோவையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பது தேவை இல்லாத ஒன்று. மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கின்ற மழைக்காலங்களில் பாதிக்கக்கூடிய ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற இடங்களை அரசு கண்காணித்து எதிர்காலத்தில் இது போன்று நடக்காதவாறு உதவி செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவோம். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வந்தவுடன் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்றார்.