சென்னை: ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப். 9) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் , மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "என் பிறந்தநாளில் தான் இந்த அணி தொடங்கப்பட்டது. இளைஞரணியே பார்த்து பொறாமை கொள்ளும் அளவு இந்த அணியின் செயல்பாடு உள்ளது. பொதுவாக உச்சி வெளியிலில் தான் இந்த அணியின் நிகழ்ச்சிகள் நடக்கும் , ஆனால் பொதுச்செயலாளர் துரைமுருகன் வந்துள்ளதால் ஏசி அரங்கில் இன்று நடத்துகிறோம். இளைஞரணிக்கு அடுத்து அதிகம் இந்த அணி கூட்டத்தில் தான் பங்கேற்றுள்ளேன். கொள்கையிலும் செழிப்பான, வசதியான அணியாக இருக்க வேண்டும் .
இளைஞர்கள் மாணவர்களை எளிதில் சென்றடையும் வாயப்பு உள்ள அணு இது தான். விளையாட்டு அனைவருக்குமான ஒன்று. திமுகவையும், விளையாட்டையும் பிரிக்கவே முடியாது. கருணாநாதி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். கருணாநிதி எப்போதும் தொலைக்காட்சியில் விளையாட்டு போட்டிகளை பார்த்துக் கொண்டிருப்பார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர், போட்டியை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாதபோது , அவ்வப்போது ஸ்கோர் என்ன என்று கேட்பார்.
நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்டலாம் என, அரசியலை ஹை ஜம்ப் (high jump) விளையாட்டுடன் ஒப்பிட்டு பேசுவார். உங்களுக்கு கிடைத்துள்ளது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இப்போதெல்லாம் மைதானம் , உடற்பயிற்சி கூடம், விளையாட்டு உபகரணங்கள் குறித்த கோரிக்கைகள்தான் என்னிடம் அதிகம் வருகின்றன. ஏழை எளிய வீரர்களை கண்டறிந்து நீங்கள் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும், விளையாட்டுக்காக அரசு செய்வதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
முதல்வர் குறிப்பிட்டுள்ள படி கலைஞர் தொடர் ஜோதி ஓட்டப் போட்டியை மாவட்டம் தோறும் நடத்த வேண்டும். திமுக கொள்கைகளை கொண்டு சேர்க்கும் வகையில் ஊர்தோறும் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் , உங்களுக்கு அரசும் , விளையாட்டு மேம்பாட்டு துறையும் துணை நிற்கும். 'மினிட் புக்' நடைமுறை இப்போது குறைந்து விட்டது , மீண்டும் அதை புதுப்பிக்க வேண்டும்.
நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை பற்றி 'மினிட் புக்'கில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மீது ஏதேனும் புகார் வந்தால் அதை ஆதாரமாக காட்டி நீங்கள் உங்களது செயல்பாட்டை பற்றி எடுத்து. தமிழ்நாட்டை வென்று விடலாம் என சிலர் நினைக்கின்றனர். அவர்களின் முயற்சி தமிழ்நாட்டில் ஒருபோதும் வெல்லாது. இந்திய ஒன்றியத்தில எங்கு வென்றாலும் அவர்களால் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது.
ஏனென்றால் அதற்கு காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எனும் வலுவான அணியும் , முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் கேப்டனும், பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் போன்ற பயிற்சியாளர்களும்தான்.
எப்போது டிபன்ஸ் ஆட வேண்டும், எப்போது சிக்சர் அடிக்க வேண்டும் என முதல்வர் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ளார் . திமுக அணிகளுக்குள் நல்ல போட்டி இருக்க வேண்டும்" என்றார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "54 ஆண்டு காலம் கருணாநிதியின் மடியிலேயே இருந்தவன் நான் , இன்று ஸ்டாலின் அருகிலேயே இருக்கிறேன். என் அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன் உதயநிதியின் அரசியல் வீச்சு அந்த இரு தலைவர்களையும் தாண்டி உயர்ந்து நிற்க போகிறது.ஒரு காலம் வரும் அந்த காட்சியை நான் இருந்து பார்ப்பேன். கருணாநிதி , இரண்டு பேரையும் உதயநிதி ஜெயித்து விடுவார். அருணாசலப் பிரதேசம் வரை உதயநிதி யார் என தெரிந்துள்ளது.
திமுகவில் 23 அணிகள் இருக்கின்றன , அனைத்திலும் மணிமணியான ஆட்களை தேர்வு செய்துள்ளீர்கள். தென்னங்கன்றுக்கு எரு போடுவது போல உங்களுக்கு கொள்கை தெரிந்திருக்க வேண்டும். கொள்கை தெரிந்தால் தான் பொறுப்பில் நிலைக்க முடியும் , சில நேரங்களில் சீசன்களுக்கு ஏற்ப கொள்கை வரும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் என்னோடு இருந்தவர்கள் பலர் இப்போது இல்லை , கொள்கை என்பது உணர்ச்சியின் அடிப்படையில் பார்க்காமல் , உணர்வின் அடிப்படையில் பார்க்க வேண்டும்" என கூறினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "9 ஆண்டுகளுக்கு முன்பு மோடி இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னார் . தற்போது ஜி 20 மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகையை வைத்ததன் மூலம், தான் சொன்னைதை செய்துவிட்டார். இதற்காக அவருக்கு நான் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
திமுக என்ற கட்சியே சனாதானத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டது, சனாதானத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை. கொள்கைக்காகவே நாங்கள் எப்போதும் நிற்போம். என்னை தொட்டால் 10 லட்சம் தருவதாக சொல்லியுள்ளனர் , எனக்கு டிமான்ட் அதிகமாகி கொண்டே செல்கிறது. சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார் , அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன். பொய் செய்தி பரப்புவதே பாஜகவின் முழு நேர வேலையாக உள்ளது.
அதிமுக என்ற கட்சியின் பெயரில் அண்ணா பெயர் உள்ளது, சனாதனத்திற்கு எதிராக அண்ணாதான் அதிகம் பேசியுள்ளார், எனவே சனாதனம் தொடர்பாக தற்போது எழுந்த பிரச்சனையில் அதிமுகவின் கருத்தை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சனாதனம் தொடர்பாக நான் பேசியது விமர்சிக்கப்படுவதற்கு காரணம் தனி மனித தாக்குதல் அல்ல, கொள்கை தாக்குதல்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!