தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தபால் வாக்குகளுக்கான வாக்குச்சீட்டு 16ஆம் தேதி முதல் வெளியூர்களுக்கு அனுப்படும் என்றும், அதைப்பெற்றுக் கொண்டவர்கள் 22ஆம் தேதிக்குள் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்றுமுதல் சென்னையை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குச்சீட்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1000 தபால் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தேர்தலானது 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், வேட்பாளர்கள் அடையாள அட்டையை பெறுவதற்கு 18ஆம் தேதிக்குள் தங்களது புகைப்படத்தை தேர்தல் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் எனவும், அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.