தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் சார்பில் தமிழ்நாடு மரபுசார் அறிவியல் என்ற கருத்தின் அடிப்படையில் சென்னை அறிவியல் திருவிழா 2019 நடைபெற்றது. இந்த திருவிழாவில் பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவரும், இஸ்ரோவின் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியல் ஆய்வாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “இந்திய அளவில் பிப்.28-ம் தேதி அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. அதனையொட்டி தமிழ்நாடு மரபுசார் அறிவியல் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதில் மாணவர்கள் தங்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளை வைத்துள்ளனர். இந்த கண்காட்சி அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதுடன், பார்ப்பவர்களுக்கும் உந்துதலை ஏற்படுத்தும்.
கடந்த சில மாதங்களாக அரசுப்பள்ளிகளில் அதிக அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் திறனை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு மைதானங்கள் இருப்பதுபோல் அறிவியல் ஆய்வகங்கள் இருந்தால் அங்கு சென்று அவர்கள் கண்டுபிடிப்புகளை செய்ய முடியும்.
தமிழகத்தில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் அந்த மாணவர்களையும் அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்த்து கண்டுபிடிப்புகளை கற்று தருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சிறிய சிறிய பொருட்களை கண்டுபிடிப்பதற்காக அட்டல் டிங்கரிங் லேப் மூலமும் பள்ளிகளில் கற்பித்து வருகிறோம்” என தெரிவித்தார்.