கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளன. நோய் பாதிப்பு தீவிரமடைந்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக படுக்கை வசதிகள் தேவைப்படும். அப்போது நமது மருத்துவமனைகளில் போதிய இடம் இருக்காது என கருதப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில், கரோனா வைரசை எதிர்கொள்ள பெருநகரங்களில் குறைந்தபட்சமாக 3,000 படுக்கைகளும், சிறு நகரங்களில் 600 படுக்கைகளும் தேவைப்படும் என பொது சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, தனியார் இடங்களில் கரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பது போன்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காலியாக உள்ள ரயில் பெட்டிகளை தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் வேலையில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

அதன்படி, குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில் பெட்டிகளில் உள்ள கீழ் இருக்கையில் நோயாளிகள் படுக்க வைக்கப்படுவார்கள். இதற்காக நடு படுக்கைக்கள் (மிடில் பெர்த்) நீக்கப்படும். மேல் படுக்கைகளுக்கு ஏற பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகள் அகற்றப்படும். ரயில் பெட்டியின் இரு நுழைவு வாயில்களை ஒட்டி உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு அவை விரிவாக்கப்படும். ரயில் பெட்டியில் உள்ள ஒரு கழிவறையை மரப்பலகை கொண்டு அடைத்து குளியலறை ஆக மாற்றப்பட்டு அங்கு ஷவர் வசதி, வாளி, மக் போன்றவை வைக்கப்படும். ரயில் பெட்டியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லேப்டாப் மற்றும் செல்போன் சார்ஜ் வசதி செய்யப்படும்.

நோயாளிகள் தங்கவைக்கப்படும் அனைத்து இடங்களிலும் 230 வாட் திறன் கொண்ட சார்ஜிங் வசதிகள் நிறுவப்படும். தனிமைப்படுத்தபட்ட அறை என்பதால் ஒவ்வொன்றுக்கும் இடையே பிளாஸ்டிக்கினாலான திரை சீலைகள் அமைக்கப்படும். 20 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரயில் பெட்டிகளை இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மண்டல ரயில்வே நிர்வாகமும் மாதிரி தனிமைப்படுத்தப்பட்ட ரயில் பெட்டி ஒன்றை உருவாக்கி, மேலும் கூடுதலாக இதுபோன்று அமைப்பதற்கு பொருள்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற ரயில் பெட்டியில் ஒரு கேபினில் ஒரு நோயாளிக்கு அல்லது தேவைப்படும் பட்சத்தில் ஒரே கேபினில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயார் செய்யப்படுகிறது. இனிவரும் காலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மோசமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இல்லாமல் திணறி வரும் சூழ்நிலையில் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.