சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று (அக்.10) நடைபெற்று வருகிறது. இதில் நேரமில்லா நேரத்தில், நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும், உடல் நலன் குன்றியும், மன நலம் பாதித்தும் பல ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக பேரவையில் பேசிய எதிகட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குறிப்பாக 36 இஸ்லாமியர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை மீட்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அறிவுரைக் கழக (Advisory Board) திட்டத்தின்கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும், மருத்துவக் காரணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி 15 ஆயுள்தண்டனை சிறைவாசிகளும் ஏற்கனவே முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், 566 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு, 8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். ‘இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை; அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை’ என்று அதிமுகவினர் கூறி வருவது மாய தோற்றத்தை ஏற்படுத்தும் செயல். இந்த விஷயத்தில் சட்டரீதியான, முறைப்படி தமிழ்நாடு அரசு உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்கு நான் தங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை பற்றி அதிமுக பேசுவதால், நான் அவர்களைப் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? அதை நான் இப்போது அறிய விரும்புகிறேன்.
தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்விடுதலை செய்த உங்களுடைய ஆட்சியில், ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது ஆணவத்தோடு அல்ல; அடக்கத்தோடு நான் கேட்க விரும்புகிற கேள்வி.
ஆட்சியில் இருந்த போது இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அதிமுக., இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும்.
அதைவிட சிறுபான்மை சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும் என்பதை மாத்திரம் இங்கே பதிவு செய்கிறேன்” என முதலமைச்சர் பதிலுரையை முடித்தார். இதையடுத்து அதிமுகவினர் இஸ்லாமியர்களின் விவகாரத்தில் நேரமில்லா நேரத்தில் தங்களுக்கு பேச அனுமதி வழங்கபடவில்லை என வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியார்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் திமுகவிற்கு எங்கள் மீது பயம் வந்து விட்டது. சிறுபான்மை மக்கள் எங்களை சந்திப்பதால் அவர்களின் வாக்குகள் சிதறி விடும் என்பதால் எங்கள் மீது கோபப்படுகின்றனர்.
பல இஸ்லாமிய அமைப்புகள் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த அடிப்படையில் இன்று கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கும் போது இதற்கான பதில் அளித்திருந்தால் பிரச்சனை இல்லை. இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கரை என கேட்டதோடு, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்றார்.
இதற்கு எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். இஸ்லாமியர்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். பாதுகாத்தால் நல்லது தான், அதற்கு ஏன் எங்கள் மீது எரிச்சல் படுகிறார்.
அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என்று முதலமைச்சர் பேசியதற்கு நாங்கள் பதில் அளித்தோம். ஆனால் எங்களை பேச விடவில்லை அதனால் வெளிநடப்பு செய்தோம். திமுக ஆட்சியில் தான் கோவை கோட்டைமேடு இஸ்லாமிய பகுதி தாக்குதல் நடத்தி 19 இஸ்லாமியர்கள் சுட்டு வீழ்த்தினர். ராஜீவ் காந்தி வழக்கில் ஏழு பேர் விடுதலை செய்ததற்கு காரணம் அதிமுக அரசு தான் என்றார்.
அதிமுக அரசு எப்போதுமே சிறுபான்மை நல மக்களுக்கு பாதுகாப்பாக தான் இருக்கும். அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் அமைதி பூங்காவாக இருந்தது. சிறுபான்மை நல மக்கள் பாதிக்காத வகையில் செயல்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. இஸ்லாமியரான அப்துல் கலாமை குடியரசு தலைவர் ஆகியது அதிமுக தான்.
சிறுபான்மை மக்களை மாயாஜாலத்தில் வைத்துக் கொண்டு இருந்தது திமுக அரசு. இது போன்ற பிரச்சனைகளை கொண்டு வருவதால் சிறுபான்மை நல மக்கள் எங்களை பாராட்டுகிறார்கள் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோபம் என்றார். மேலும், திமுக என்ன இஸ்லாமியர்களுக்கு செய்தது, சிறுபான்மை மக்களுக்கு நாடகத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். இன்று அந்த மாயத்தோற்றம் காணாமல் போகும் சூழ்நிலை வந்துள்ளது.
சட்டமன்றத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் நாங்கள் நியாயமான கருத்தை எடுத்து வைத்தோம். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்கியதால், எங்களது போராட்டத்தால்தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. 1999-இல் பாஜகவுடன் திமுக ஏன் கூட்டணி வைத்தது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.
நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் திமுகவிற்கு எங்களை பார்த்து பயம் வந்துவிட்டது. கூட்டணியில் இருந்ததால், கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு எங்களுக்கு உடன்படாத சிலவற்றையும் நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியிருந்தோம். அந்த அடிப்படையில்தான் சிஏஏவை ஆதரித்தோம் என கூறினார்.
இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே கொள்கையா? பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி விட்டதால் திமுகவிற்கு எங்கள் மீது பயம் வந்து விட்டது. மக்கள் பிரச்சினையில் வரும்போது கூட்டணியில் இருப்பவர்களை கூட எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் அதிமுக” எனத் தெரிவித்தார்.