நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் அண்ணாத்த படத்தின் படப்படிப்புக்காக ஹைதராபாத் சென்றார். ஆனால் அங்கு படக்குழுவினர் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ரஜினி பின் சென்னை திரும்பினார். மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நடிகர் ரஜினி ஓய்வில் இருந்துவந்தார்.
டிச31ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்து அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த ரஜினி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவாலும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாலும், தாம் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ரஜினியின் இந்த திடீர் முடிவால் அவரது சில ரசிகர்களை ஆத்திரமடைந்தனர். மேலும் சிலர் அவரது வீட்டின் முன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ரஜினி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர் அடுத்த வாரம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: ரஜினி மன உளைச்சலில் இருக்கிறார் - அர்ஜுன மூர்த்தி