சென்னை: கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜுன் 2ஆம் தேதி இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடத்தில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 280க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மறு சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் கானும் பணியும் நடந்து வருகிறது. கோரமண்டல் ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களில் தமிழர்கள் கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்து வருவது, அவர்களுக்கு அங்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய மீட்பு குழுவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரயில் விபத்து குறித்து பேசிய அவர், "ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறது என எடுத்துரைத்து இருக்கிறார்.
அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்பதற்காக மேலும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இந்த விபத்தை வைத்து திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சரை அருகில் வைத்துக் கொண்டே விபத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். எங்களுடைய கேள்வி என்னவென்றால், விபத்திற்கு காரணம் தனிமனித தவறா? அல்லது நிர்வாக தவறா? இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் எப்படி இந்த விபத்து நடந்தது?
இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ரயில் பாதைகள் உள்ளன. ஆனால், அதில் 1200 கிலோ மீட்டருக்கு மட்டுமே கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலை மாநிலம், மாநிலமாக சென்று திறந்து விளம்பரம் தேடிக் கொள்ளும் பிரதமர் மோடி, இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தால் விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை.
ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று நேரடியாக கூறவில்லை. அது அண்ணாமலை, அதிமுக செய்யும் வேலை. இந்த விபத்தை வைத்து திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை. கள்ளச்சாராயம் விவகாரத்தில் சாராயம் அருந்தியவர்கள் மீதும் குற்றம் உள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் என்று கேள்வி கேட்கிறீர்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அதிகரிப்பது தொடர்பாக முதலமைச்சர் பரிசீலனை செய்வார்.
சி.ஏ.ஜி அறிக்கையில் தவறு செய்கின்ற துறையில் ரயில்வே இருக்கிறது. அதைக் கூட இந்த அரசு கவனிக்கவில்லை. இந்த அரசு தேவையற்ற விளம்பரம், மக்களை திசை திருப்புவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த விபத்து குறித்து வெளிப்படையாக விசாரணை நடைபெற வேண்டும். அதை மக்கள் முன் தெரியப்படுத்த வேண்டும். தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு கோரிக்கை வைப்போம்" என்று கூறினார்.