இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில் உள்ளாட்சி பதவிகளுக்கு கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கேட்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெறாத காரணத்தால் மாநகராட்சி மேயர், நகர, பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு விருப்ப மனு அளித்தவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பலர் கட்டணங்களை திரும்பப் பெற்று வருகின்றனர்.
விருப்ப மனு அளித்து விண்ணப்பக் கட்டணத் தொகையை திரும்ப பெறாத கட்சியினர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரையில் கட்டணம் செலுத்தியதற்கான அசல் ரசீதுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் அளித்த விளக்கத்தில், ”உள்ளாட்சித் தேர்தலுக்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பம் செய்தவர்களின் கட்டணத்தை கட்சி திருப்பி தருகிறது. முன்னதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி எல்லை, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி எல்லைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஏற்கனவே விருப்ப மனு அளித்தவர்கள் போட்டியிடும் பகுதிகள் மாறுபட வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் போது விண்ணப்பம் செய்து போட்டியிடலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”உள்ளாட்சித் தேர்தலை சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் நடத்தலாமா? என்பது குறித்து அதிமுகவில் நாளை (நவம்பர் 23) ஆலோசனை மேற்கொள்கிறோம். அதன் அடிப்படையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் 2019 டிசம்பர் 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அப்போது ஊராட்சிகளுக்கு தனியாகவும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு தனியாகவும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை எதிர்த்தும், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முடிந்த பின்னர் தான் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயராகி வருகிறது. இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத பகுதிகளில் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.