சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக அறிவு சார்ந்த காப்புரிமை பிரிவு (IPRC) தொடங்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவம் சார்ந்த அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெற விண்ணப்பிக்கலாம் எனத் துணைவேந்தர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "அறிவு சார்ந்த காப்புரிமை (IPRC) என்பது புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கப்பூர்வமான படைப்புகளைப் பாதுகாக்கும் சட்ட உரிமையைக் கொண்டதாகும். மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்பூர்வமான அங்கிகாரத்தைப் பெற்றிடும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்பினை பெற்றுள்ள மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் துறைசார்ந்த புதிய பல கண்டுபிடிப்புகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றிடும் வகையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதன் முறையாக அறிவு சார்ந்த காப்புரிமை பிரிவு (Intellectual Property Right Cell) TNSTSC மற்றும் TIFAC ஆகியோரின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள், மக்கள் நலம் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், அவை உரிய முறையில் காப்புரிமை பெறப்படுவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறுகின்ற வகையில், இப்பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள அறிவு சார்ந்த காப்புரிமை பிரிவினை (Intellectual Property Right Cell) பயன்படுத்திக் கொள்ளலாம்.
கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைப் பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல்கலைக்கழகம் செய்யும். ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு காப்புரிமை பெறுவதால், அவர்களின் கண்டுபிடிப்புகளை தொழில்துறையினர் பயன்படுத்தும் போது, வணிக ரீதியாகவும் பொருளாதாரம் கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும். அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கும் காப்புரிமை பெறுவதால் வேறு யாரும் பயன்படுத்த முடியாது. காப்புரிமைப் பெறுவதற்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனிதம் மரத்துப் போய்விட்டதா?.. உலக நாடுகள் அனைத்தும் ஓரணியாக நின்று போரை நிறுத்த வேண்டும்..!" மு.க.ஸ்டாலின்