சென்னை: பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான கையேட்டை சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். பின்னர் கையேட்டு பிரதிகளை 10 ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில அரசின் நிதியில் 1,000 புதிய பேருந்துகளை வாங்கும் திட்டம் கிராமபுர மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அமைந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக டீசல் கட்டணம் உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் புதிய திட்டங்களை அறிவித்து இருப்பது போக்குவரத்து துறைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக உள்ளது. அதேபோல் ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு உதவியாக இன்றைய தினம் கையேடு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தீபாவளி சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஒரு லட்சத்தை தாண்டி முன்பதிவு செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு உள்ளோம். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து காவல்துறையோடு இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
படியில் மாணவர்கள் பயணம் செய்வதை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு போதிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; எடப்பாடி மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை