சென்னை தலைமை அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ”ஒரு ஏக்கர், கணவனை இழந்த 12 ஆயிரம் மகளிருக்கு விலையில்லா கறவை பசு வழங்கப்படவுள்ளது. 1,50,000 மகளிருக்கு ஆறு லட்சம் செம்மறி, வெள்ளாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏழை மகளிர் 1.50 லட்சம் பேருக்கு 25 வகை கோழி குஞ்சுகள் வழங்கப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்துவது கிடையாது. 1,83,489 விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 கால்நடை பண்ணைகளில் பசுந்தீவனம், நாட்டின ஆடு, மாடுகள் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைத் துறையில் உதவி மருத்துவர்கள் 2,964 பேர் நியமிக்கப்பட வேண்டும், அதில் 2687 பேர் பணியில் உள்ளனர்.
கால்நடை ஆய்வாளர்களுக்கான 530 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் அம்மா ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட இருக்கிறது” என்றார்.