சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக, 'Howdy Hire Bikes நிறுவனத்துடன் இணைந்து இருசக்கர வாடகை மின்சார ஸ்கூட்டர் திட்டத்தை திருமங்கலம் வடபழனி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் தங்களுடைய மொபைல் போனில் Howdy Hire Bikes என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, நீங்கள் விருப்பப்படும் இடத்திற்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது அவசியம். வாடிக்கையாளர்கள் சென்னையில் எந்த மையத்திலிருந்தும் ஸ்கூட்டரை எடுத்துச் சென்று செயலியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வாகனத்தை விட்டு செல்லலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரத்திற்குள் ஒவ்வொரு 500 மீட்டர் இடையிலும் ஒரு மையம் அமைந்துள்ளது. பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் மற்றும் நிமிடத்திற்கு 10 பைசா மட்டுமே வாடகைக் கட்டணம் செலுத்த வேண்டும். பயணிகள் தங்களது முதல் சவாரியை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அடுத்த 5 சவாரிகளில் 50 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரவேற்பை பொருத்து இந்த வசதி மேலும் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பயணியுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் - துபாய்க்குள் நுழைய 15 நாட்கள் தடை!