சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சிக்கான (Internship) முதல்நாள் ஆட்தேர்வு முகாம் 6, 13 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. நேரிலும் ஆன்லைனிலும் நேர்காணல் நடத்தி முதன்முறையாக ஹைப்ரிட் முறையில் இந்த உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் பங்கேற்க முடிந்தது.
இந்த முகாமில் 7 நிறுவனங்களிடம் இருந்து 15 சர்வதேச உள்ளகப்பயிற்சிக்கான வாய்ப்புகள் வரப்பெற்றுள்ளன. உள்ளகப்பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 48 விழுக்காடு உயர்வடைந்துள்ளது. மேலும், புதியதாக வருகைதந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சென்னை ஐஐடியின் 2022-23 பேட்ச் மாணவர்களுக்காக நடத்திய உள்ளகப் பயிற்சிக்கு (Internship) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விழுக்காடு முதல் நாளிலேயே 32 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடியின் ஆலோசகர் முருகவேல் கூறுகையில், "தொழில்முறைப் பயிற்சி என்பது மாணவர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதியாகும். தாங்கள் கற்றறிந்த திறன்களைப்பயன்படுத்தவும் மெருகேற்றிக்கொள்ளவும் மாணவர்களுக்கு அங்குதான் வாய்ப்புக் கிடைக்கின்றன.
நிறுவனங்கள் உள்ளகப்பயிற்சி மூலம் ஆட்களைத் தேர்வுசெய்யும் முறைக்கு மாறி வருவதால், மாணவர்கள் உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் மூலம் முன்வேலைவாய்ப்புகளைப் பெறுவதும் முக்கியமாகிறது. கடந்த ஆண்டு முற்றிலும் வீடியோ கான்ஃபெரன்சிங் முறையில் நடத்தப்பட்ட நிலையில், உள்ளகப்பயிற்சிக்கான நேர்காணல் இந்தாண்டு நேரடி மற்றும் வீடியோ கான்ஃபெரன்சிங் முறையில் நடைபெற்று வருகிறது.
வருகை தந்திருக்கும் நிறுவனங்கள் நேர்காணலின் முதல் நாளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சர்வதேச உள்ளகப்பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. உள்ளகப் பயிற்சிக்கான ஆட்தேர்வு முகாமின் முதல் அமர்வின்போது மொத்தம் 37 நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில், 13 நிறுவனங்கள் நேர்காணலை நேரடியாகவும், மீதமுள்ள 24 நிறுவனங்கள் நேர்காணலை முற்றிலும் ஆன்லைன் மூலமாகவும் நடத்தியுள்ளன. கனடாவில் இருந்து மாணவர் ஒருவர் உள்பட தொலைதூர மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர்’ என்றார்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு