இலங்கை வெண்ணபுவா என்ற இடத்தில் சர்வதேச அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை, இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
இதில் இந்தியா சார்பில் பயிற்சியாளர்கள் மூ. சீனிவாசன், அசோக்குமார், மோகன் தலைமையில் 32 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆல் இந்திய கராத்தே கோச்சிங் பள்ளியிலிருந்து 14 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 14 வயதுக்குள்பட்டோருக்கு ஜூனியர் பிரிவுகளிலும் 18 வயதுக்குள்பட்டவருக்கு சீனியர் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
பின்னர் போட்டியில் பங்கேற்ற இந்திய அளவில் மாணவ, மாணவிகள் 16 தங்கப்பதக்கம் 17 வெள்ளிப்பதக்கம் 13 வெண்கல பதக்கங்களை வென்றனர். இதில் தமிழ்நாடு மாணவ மாணவிகளான நந்தா, அர்ச்சனா, ஏஞ்சலின் அலெக்ஸ், கார்த்திக், ஜினோ, அந்தோணி, அரவிந்த், லிங்கநாதன் விஷால், ஸ்ரீனிவாசன், மோகன், இலக்கியா, லோகநாதன் ஆகியோர் போட்டியில் பங்குபெற்று 11 தங்கப்பதக்கம்,14 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பின்னர் நாடு திரும்பிய மாணவ-மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவ, மாணவிகள், "இலங்கையில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து 14 பேர் கலந்துகொண்டோம், போட்டி மிகவும் கடினமாக இருந்தது. கடின பயிற்சி மேற்கொண்டதன் மூலம் வெற்றிபெற்றுள்ளோம்.
11 தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்விதமாக உள்ளது. மேலும், பல பயிற்சிகள் பெற்று ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதே எங்களது லட்சியம், இதற்காக தமிழ்நாடு அரசு உதவியும் ஊக்கமும் அளிக்கவேண்டும்" எனக் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: இந்தோனேசியாவில் பதக்கம் வென்ற மாணக்கர்களுக்கு உற்சாக வரவேற்பு!