ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி சர்வதேச நகைச்சுவை தினம் கொண்டாடப்படுகிறது. நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை மன இறுக்கத்தில் இருந்து மீண்டு, ஆரோக்கியமான மன நிலையை கொண்டுவர உதவுகிறது.
மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு தான் சிரிப்பு என கூறலாம். இது மனிதர்களிடமிருந்து பல விதமான சந்தர்ப்பங்களில் இயல்பாக வெளிப்படும்.
சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றதாக கூறப்படுகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அது உண்மையே.
"இடுக்கண் வருங்கால் நகுக"
நகைச்சுவையில், மிகைப்படுத்துதல், கோமாளித்தனம், கேலிக்கூத்து, கடி, இரட்டை அர்த்தம், மிமிக்கரி, மொக்கை உள்ளிட்டப் பல வடிவங்கள் உள்ளன.
ஒருவர் மனதை புண்படுத்தாமல் சிரிக்க வைப்பது சவாலான காரியமாகும். அத்தகைய செயல்களை எளிமையாக செய்யக்கூடிய சார்லி சாப்ளின், ஜாக்கி ஜான், மிஸ்டர் பீன் (ரோவன் அட்கின்சன்) போன்ற நகைச்சுவை நடிகர்கள் உலகளவில் தங்களது நகைச்சுவை திறனால் பெயர் பெற்றவர்கள்.
தமிழ் படங்களில் கூட முழுநீள நகைச்சுவை படங்களும் உண்டு. நாகேஷ், வடிவேலு போன்ற நகைச்சுவை கலைஞர்களை பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிடும். மக்களின் துன்பங்களை போக்கி அவர்களை மகிழ்விப்பதில் நகைச்சுவை கலைஞர்களுக்கு அதிக பங்கு உண்டு.
அடுத்தவர்கள் வேதனையில் இருக்கும்போது நாம் அவர்களை மகிழ்வித்தால், அவர்களுக்கு கிடைக்கூடிய மகிழ்ச்சியை விட நமக்கு தான் அதிக மகிழ்ச்சி தரும். எனவே சர்வதேச நகைச்சுவை தினமான இன்று நாம் அனைவரும் நகைச்சுவை கலைஞர்களாக மாறி மற்றவர்களை சிரிக்க வைப்போம்.
இதையும் படிங்க: இன்று நடிகர் விசு பிறந்தநாள்!