சென்னை: சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தில் இன்று அதிகாலையிலிருந்து முழு அளவிலான வெளிநாடுகளுக்கான விமானச் சேவைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, துபாய், குவைத், சார்ஜா, அபுதாபி, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 51 புறப்பாடு விமானங்களும், அதைப்போல் அந்த நாடுகளிலிருந்து 51 வருகை விமானங்களும், மொத்தம் 102 விமானங்கள், இந்தப் புதிய முனையத்தில் இன்று இயங்கத் தொடங்கியுள்ளன.
சமீப நாட்களாகச் செயல்பாட்டிலிருந்த பழைய முனையமான டெர்மினல் 3, வரும் பத்தாம் தேதிக்குப் பின்பு முழுமையாக மூடப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச புதிய விமானம் முனையம் முதல் ஃபேஸ் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி திறந்து வைத்தார். முன்னதாக இருந்த சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணித்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள் இந்தப் புதிய முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட சோதனை ஓட்டங்கள்: மேலும் இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் மே மாதம் 3 ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. முதலில் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன. பகலில் மட்டும் நடந்த சோதனை ஓட்டம், பின்னர் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் நடந்தது.
மே மாதம் இறுதிக்குள் புதிய முனையத்தில் சோதனை ஓட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிடும் என்றும், அதன் பின்பு ஜூன் முதல் வாரத்திலிருந்து புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தில் முழு அளவிலான வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தொழில் நுட்ப ரீதியாக சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. இதனால் பயணிகளின் முழு பாதுகாப்பு நலன் கருதி, அந்தப் பிரச்சனைகளைச் சரி செய்யப்பட்டுத் தொடர்ந்து சோதனை ஓட்டங்கள் நடந்து வந்தது.
இதனால் முன்னதாகவே அறிவித்தபடி, ஜூன் முதல் வாரத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்திலிருந்து முழு அளவில் விமானங்கள் இயக்கப்படவில்லை. புதிய முனையத்தில் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும் இந்த புதிய முனையத்தில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த ஓட்டத்தின் போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், அடுத்தபடியாக மேலும் சில விமானங்களும் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தில் இயக்கப்பட்டு வந்தன.
தொடங்கும் வெளிநாடுகளுக்கான விமானச் சேவை: இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 26 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது. இதனால் சிங்கப்பூர், மலேசியா,துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோஹா, தமாம், அபுதாபி,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன.
மேலும் பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ்,லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், கல்ப் ஏர்வேஸ், தாய் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பெரிய ரக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் படிப்படியாக புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 00:01 மணியிலிருந்து அனைத்து சர்வதேச விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையத்திலிருந்து வருகை மற்றும் புறப்பாட்டுக்கு இயங்க தொடங்கிவிட்டன. இதை அடுத்து சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம், இன்றிலிருந்து நூறு சதவீதம் முழுமையாக இயங்கத் தொடங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த புதிய முனையத்தில் இன்று 51 வெளிநாட்டு விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. அதேப்போல் 51 வெளிநாட்டு விமானங்களும், புதிய முனையத்திற்கு இன்று வருகின்றன. இன்று ஒரே நாளில் 102 விமானச் சேவைகள் புதிய முனையத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஏற்கனவே செயல்பாட்டிலிருந்த பழைய சர்வதேச முனையமான டெர்மினல் 3 எனப்படும் (டி 3) முனையம், வருகின்ற 10 தேதிக்குப் பின்பு முழுமையாக மூடப்படும் என்றும், பின்பு அந்தப் பழைய முனையத்தில் விமானச் சேவைகள் எதுவும் நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஒரு சில வாரங்களில் பழைய முனையமான டி3 யின் முனையப் பணிகள் தொடங்க இருக்கிறது என்றும், அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தின் ஃபேஸ் 2, கட்டடப் பணிகள் தொடங்க இருக்கிறது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயும் விஜயகுமாரும்! 'தெறி' பட காட்சிகளுக்கு நிஜ இன்ஸ்பிரேஷனாக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ்!