சென்னை: ஐ.எஃப்.எஸ் எனப்படும் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சம் மக்களிடம் சுமார் 6,000 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ரூபாய் 8,000 மாதம் தருவதாக கூறி விதிகளை மீறி வசூல் செய்தது தொடர்பாக அந்த நிறுவனத்தின் ஐந்து இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிறுவனம் நேரடியாக வசூல் செய்யாமல் நான்கு போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் முகவர்களை மாவட்ட ரீதியாக வைத்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூல் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. முதற்கட்ட விசாரணையில் முக்கிய முகவரான சரவணகுமார் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மின்மினி சரவணன் குமார் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வேலூரை சேர்ந்த ஜெகநாதன் என்ற மற்றொரு முகவரையும் அரக்கோணத்தை சேர்ந்த குப்புராஜ் என்ற முகவரையும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகவர் ஜெகநாதன் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான லட்சுமி நாராயணனின் உதவியாளராகவும் இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில் பொதுமக்களிடமும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வசூல் செய்த பணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியையும், தனியார் கல்யாண மண்டபத்தையும் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோன்று அரக்கோணத்தைச் சேர்ந்த குப்புராஜ் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த கைது நடவடிக்கையின் போது 21 சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் முகவர்கள் ஆகியோரின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் பொதுமக்களிடம் வசூல் செய்த மேலும் பல முகவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து ஐந்து இயக்குநர்களும் தலைமறைவாக இருப்பதால் அவர்கள் பெயரில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் சுதந்திர தினம் கொண்டாடிய விக்னேஷ் சிவன் நயன்தாரா