சென்னை: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து போதைப்பொருட்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை இலங்கைக்கு கடத்தி வந்து, பல நாடுகளுக்கு சப்ளை செய்து வந்தவர், இலங்கை கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான். தன்னை தொழிலில் எதிர்த்தவர்களை கூலிப்படையை ஏவி கொலை செய்தும் வந்தார். இவர் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
25ஆண்டுகளுக்கும் மேலாக பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த கஞ்சிபானி இம்ரானை பிடிக்க இலங்கை அரசு சிறப்பு தனிப்படை அமைத்து, கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் பிரபல ஹோட்டலில் பதுங்கி இருந்தபோது கஞ்சிபானி இம்ரானை கைது செய்தது. பின்னர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோதும் இம்ரான் தனது கடத்தல் வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்ததாகத் தெரிகிறது. போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத செயலுக்கு கஞ்சிபானி இம்ரான் பயன்படுத்தியும் வந்துள்ளார்.
கரோனா காலகட்டத்தின்போது சிறையில் கஞ்சிபானி இம்ரான் அறையிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செல்போன்களை கஞ்சிபானியின் தந்தை மற்றும் சகோதரர்கள் சாப்பாட்டில் மறைத்து அனுப்பி வைத்தது தெரியவந்ததையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கடந்த ஆண்டு கேரளாவின் விழிஞ்ஞம் கடலோரப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், 9 எம்.எம் புல்லட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த குணசேகரா தலைமையிலான 6 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் இவர்களுக்கு கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் என்.ஐ.ஏ விசாரணைக்காக கொச்சின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல கடந்த வாரம் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச போதைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் 20ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரானுக்கு இலங்கை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கஞ்சிபானி இம்ரான் தனது கூட்டாளிகளுடன் தலைமன்னாருக்கு தப்பிச்சென்று, அதன் பின்னர் ராமேஸ்வரத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை, தமிழக உளவுத்துறையை எச்சரித்தது. அதனடிப்படையில் தமிழக காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து கஞ்சிபானி இம்ரானை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான் மும்பைக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கஞ்சிபானி இம்ரான் தமிழ்நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர் தப்பிக்க தமிழக போதைப்பொருள் கடத்தல் கும்பல் உதவியிருக்கக் கூடும் எனவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கஞ்சிபானி இம்ரான் பாகிஸ்தான் தப்பிக்க முயல்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரானை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு பாட்டிலுக்கு ஆசப்பட்டது தப்பா? - போலி என்ஐஏ வழக்கில் திருப்புமுனை