சென்னை: தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாகக்கூறி, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
தான் உண்மையைப் பேசியதால், தன்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள் என்றும், தான் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றும், காயத்ரி ரகுராம் பதிலளித்திருந்தார். தான் பாஜகவுக்கு எதிரானவள் என யார் கூறினாலும், அவர்களை எதிர்ப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.
காயத்ரி இடை நீக்கத்தையடுத்து பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்கும் சளைக்காமல் அனைத்து விமர்சனங்களுக்கும் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்து வருகிறார்.
பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவரான அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், "கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தனியார் ஹோட்டலில் திமுகவைச்சேர்ந்த சபரீசனை, காயத்ரி ரகுராம் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாஜகவில் துரோகிகளுக்கு இடமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காயத்ரி ரகுராம், "முட்டாள், அது என்னுடைய தோழியின் பிறந்தநாள் விழா. அவள் என்னையும், சில ஃபேஷன் துறை நண்பர்கள், பிரபலங்களையும் தனித்தனியாக அழைத்திருந்தாள். இது எதிர்பாராத சம்பவம். வணக்கம் மற்றும் ஹாய் சொல்வது என் கண்ணியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க நான் நாகரிகமற்றவள் இல்லை" எனப் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையையும் எதிர்ப்பேன் - நடிகை காயத்ரி ரகுராம்