சென்னை: சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரஞ்சித் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “சேலம் மாவட்டம், மல்லூர் பஞ்சாயத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக, திருச்சி பிரதான சாலையில் உள்ள ஏழு புளியமரங்களை வெட்ட அனுமதி கோரி நெடுஞ்சாலை துறைக்கு மல்லூர் பஞ்சாயத்து கடிதம் அனுப்பியது.
மல்லூர் கிராமத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை உள்ளதால் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலையை பயன்படுத்துவதால், புதிதாக பேருந்து நிலையம் கட்ட எந்த அவசியமும் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலான இந்த மரங்கள் எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை என்பதால் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, மரங்களை வெட்டாமலேயே பேருந்து நிலையம் கட்ட முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, மரங்களை வெட்ட அனுமதி வழங்க கூடாது என சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, சேலம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மல்லூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இரு பிரிவினர் பிரபந்தம் பாட இடைக்கால தடை