மதுரை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளேன். பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை கடந்த 2022-ல் வெளியிடப்பட்டது. அதில் என் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
என்னை சாட்சியாக விசாரணை ஆணையத்துக்கு அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், எனது பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். எனது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று(பிப்.28) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஜார்க்கண்ட் மாஜி CM