கரோனா தொற்றின் 2 ஆம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுவருவதோடு, தொழில்துறையும் முடங்கியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவைத் தொடர் உற்பத்திக்கு இடையூறாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், கரோனா தொற்றால் தொழில் உற்பத்தி தடைபடாமல் பாதுகாக்கும் வகையிலும், பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாடு தொழில்துறை சார்பாக தொழிற்சாலை தொழிலாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக, நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தமிழ்நாடு தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் கூறுகையில், "தமிழ்நாட்டில் 45 வயதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர்.
அதில், தற்போது 1 லட்சம் நபர்கள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசிக்கான தட்டுப்பாடு காரணமாக, கடந்த சில நாள்களாக இந்த பணி சற்று சுணக்கம் அடைந்திருந்தது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் புதிய தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்துள்ளதால், மீண்டும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.
இதுதொடர்பாக கிண்டியைச் சேர்ந்த சிறு, குறு தொழில் உற்பத்தியாளர் பாஷா கூறுகையில், "சிட்கோ, மாநகராட்சி இணைந்து தடுப்பூசி முகாம்களை நடத்துகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதிக அளவிலான தொழிலாளர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள்" என்றார்.
தடுப்பூசி பாதுகாப்பானது என்பதால், அவை எங்கள் தொழிலுக்கு இடையூராக அமையாது என்று நம்புவதாகத் தெரிவிக்கும் அம்பத்தூர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாலச்சந்திரன், "முன்பு தொழிலாளர்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் இருந்தது.
தற்போது அந்த நிலை இல்லை. 99 சதவிகித தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள். மே 1 ஆம் தேதிக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை அதிகரிப்பதால், அரசு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 45 வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்தகட்டமாக 45 வயதுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணியில் தொழில்துறை இறங்கியுள்ளது.
இதற்காக நிறுவனங்களிடமிருந்து தொழிலாளர்களின் வயது, தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதி, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மே 1 ஆம் தேதிக்குப் பின்னர், இவை நடைமுறைப்படுத்தப்படும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 18 முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிக்கான கட்டணத்தை குறிப்பிட்ட நிறுவனமே செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தடுப்பூசி முகாம்களில், 400 ரூபாயில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மாநில அரசுக்கு குறைந்த விலையில் தடுப்பூசி வழங்கப்படுவதால், நாங்கள் இங்கே கொள்முதல் செய்து ஏற்பாடுகளை மட்டுமே செய்துவருவதாகவும், அந்தந்த நிறுவனங்கள்தான் தங்களது தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த பணம் செலுத்த வேண்டும் என்றும் முருகானந்தம் கூறினார்.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை 600 ரூபாயாக உள்ளது. எனினும் தனி நபர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.