சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் மாநிலத்தின் அஸ்திவாரமாக இருக்கக்கூடிய பிரிவு உளவுத்துறை. நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தலை முன்கூட்டியே அறிந்து தகவல் அளிக்கும் முக்கிய பொறுப்பை உளவுத்துறை கொண்டுள்ளது.
அதுமட்டுமின்றி அரசியல் கட்சியை கண்காணித்தல், மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணித்தல், தீவிரவாத நடமாட்டத்தை கண்டறிதல், ரவுடிகளுக்குள் நடக்கும் மோதல் இவற்றை கண்காணிக்க தனித்தனியாக விங்க் (பிரிவுகள்) அமைத்து இவைகளை முன்கூட்டியே ரகசியமாக அறிந்து உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்புவதே உளவுத்துறையின் பிரதான பணியாகவே கருதப்படுகிறது.
ஆனால், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் மாநிலத்தின் அஸ்திவாரமாக இருக்கக்கூடிய உளவுத்துறை செயலிழந்து இருப்பதாகவே உணர்த்துகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 3 மிகப்பெரிய சம்பவங்களில் உளவுத்துறை தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜூலை மாதம் 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி சந்தேகமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் ஜூலை 17ஆம் தேதி கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடியதுடன், காவல்துறை வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் பலர் உளவுத்துறை சொதப்பலால் தான் கலவரம் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை எழுப்பியது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலமாக கலவரத்திற்கு ஆட்கள் திரட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்காக உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவில் பிரத்யேக டீம் இருந்தும் கோட்டைவிட்டது.
இதன் பிறகு பி.எப்.ஐ அமைப்பு தொடர்பான இடங்களில் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் தீவிரவாத செயலை ஊக்குவிக்கும் விதமாக இந்த அமைப்பு செயல்பட்டது தெரியவந்தது. இதனால் பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக பி.எப்.ஐ அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்ட போதிலும், உளவுத்துறை இதை தவறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக செப்டம்பர் 22ஆம் தேதி கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் வீடுகள், ஹிந்து அமைப்பு அலுவலகங்களில் பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவமும் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், உளவுத்துறை மீண்டும் சொதப்பியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தின் மூலம் ஆட்டம் கண்ட உளவுத்துறை தனது கட்டமைப்பை பலப்படுத்தும் என்று எண்ணி இருந்த நிலையில் மீண்டும் உளவுத்துறை சொதப்பி உள்ளது. கடந்த 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் காரில் குண்டுவெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இவரது வீட்டிலிருந்து வெடிபொருள், ஆணிகள், பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், இஸ்லாமிய சித்தாந்தம், ஜிகாத் அடங்கிய புத்தகங்கள் என 109 பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபினுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி உள்ளனர்.
ஆனால் விசாரணை வளையத்தில் இருந்த ஜமேசா முபினை பின்னர் கண்காணிக்க உளவுத்துறை தவறியதால் கார் வெடிகுண்டு சம்பவம் அரங்கேறி இருப்பதாக குற்றஞ்சாட்டபட்டுள்ளது. இந்த வழக்கில் உளவுத்துறை கோட்டைவிட்ட பின்னர் உடனடியாக இந்த வழக்கை என்.ஐ.ஏவிற்கு மாற்றாமல் அரசு காலம் தாழ்த்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என் ரவி குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தொடர்ச்சியாக கடந்த 4 மாதத்தில் 3 மிகப்பெரிய சம்பவங்களில் உளவுத்துறை கோட்டைவிட்டிருப்பதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை டி.எஸ்.பி. ராஜாராம் கூறியதாவது, "உளவுத்துறையில் நுண்ணறிவு பிரிவு, கியூ பிராஞ்ச் என பல்வேறு பிரிவுகள் செயல்படுவதாகவும், உளவுத்துறையில் ஆள்கள் பற்றாக்குறை இருப்பதால் கூடுதலாக ஆள்களை சேர்க்கவும், தீவிரவாத இயக்கத்தை கண்காணிக்க மட்டுமே பிரத்யேகமாக தனிப்படை அமைக்க அரசு முடிவெடுத்து இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மாநில அரசுக்கு தைரியமிருந்தால் எனக்கு சம்மன் அனுப்பட்டும்' - அண்ணாமலை