சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத் தலைவர்கள் மீதான சாதிய பாகுபாடுகள் தொடர்பான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், 'குடியரசுத் தினத்தன்று (Republic Day 2023) சாதியப் பாகுப்பாடு இல்லாமல் பட்டியலினத் தலைவர்கள் (SC ST panchayat presidents) கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும்' என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'கிராமசபை (Gram Sabha) கூட்டத்திலும் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை தொடர்ந்து கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்ய வேண்டும்' எனவும் அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (Tamil Nadu Abolition of Untouchability Front) சார்பில் சுதந்திரத்தினத்தின்போது 60-க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற முடியாத சூழ்நிலை நிலவுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தது. மேலும், எந்த ஊராட்சியில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறது என்றப் பட்டியலையும் வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, சாதியப் பாகுபாட்டால் தேசியக்கொடி ஏற்றுவது பட்டியலினத் தலைவர்களுக்கு மறுக்கப்படும் எனப் புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும், கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கணக்குகள் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், பயனாளிகளின் பட்டியலும் வெளிப்படையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராமத்திற்கான தேவைகள் குறித்து கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்று (ஜன.20) அனுப்பி உள்ள கடிதத்தில், 'ஒரு சில கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு மற்றும் 1969ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதிய மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு ஆகிய சட்டப் பிரிவுகளை கருத்தில் கொண்டு 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் (75th Independence Day) எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும் அவ்வித சாதியப் பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இதுகுறித்து எடுக்கப்பட்ட அறிக்கையினை அரசுக்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில், நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருள் தொடர்பாக பட்டியலினத் தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படகூடிய பிரச்னைகளுக்கு உரிய 15 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை களையுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், நடந்து முடித்த 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் இந்த பிரச்னைகளுக்குரிய இணங்கள் தொடர்பாக அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைகள் பெறப்பட்டு அரசால் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி மேற்கூறிய 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எவ்வித பிரச்னைகளும் இனி வருங்காலங்களில் ஏற்படாதவாறு உரிய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தக்க ஆலோசனை அளித்து எவ்வித புகார்களுமின்றி எதிர்வரும் 26.1.2023 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் குடியாக தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
எதிர்வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, நடைபெறும் கிராமசபை கூட்டத்திலும் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை தொடர்ந்து கண்ணியத்துடன் நடத்தும் விதமாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் உரிய நடவடிக்கைகள் எடுத்து உறுதி செய்யுமாறும்; இது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை (உரிய ஆதார நகல்களுடன், புகைப்படத்துடன்) அரசுக்கு உடனுக்குடன் அனுப்புவதோடு எதிர்வரும் குடியரசு தினம் அன்று கிராமசபை முடிந்தவுடன் எவ்வித பிரச்னைகளுமின்றி நடைபெற்றுள்ளது என்பதனையும் உறுதி செய்து விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டியலின மக்களை புறக்கணிக்கிறதா தேவலாபுரம் ஊராட்சி? - பொதுமக்கள் நூதன போராட்டம்