கரோனா தொற்று எளிதில் பாதிக்கும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும்படியான நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மே.12) விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் நீதிபதிகள் இந்த வழக்கை மீண்டும் நாளை (மே.13) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக ஏராளமான அரசியல் கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முகக் கவசம் அணியாமல் தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் குவிந்து வருவதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் கரோனா பரவல் நிலைமையின் தீவிரத்தை கட்சியினர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சபாநாயகரின் அதிகாரங்கள் என்னென்ன?