சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழிற்கூட்டமைப்பு தென்மண்டலத்தின் சார்பில் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகள் மற்றும் திறன்களில் மேம்படுத்துவது என்ற தலைப்பில் கல்வி 4.0 என்ற கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார். கல்லூரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே ஒரு உறவு இருக்க வேண்டும். இதற்காக உருவாக்கபட்டது தான் "நான் முதல்வன் திட்டம்". தற்போதைய தேவைக்கேற்பவும், காலத்திற்கு ஏற்ப கல்வி என்பது மாற வேண்டும். கல்வியையும், தொழிலும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
"நான் முதல்வன்" என்பது நான் முதலமைச்சர் என்பது அல்ல. என்னுடைய துறையில் நான் முதலவனாக அனைவரும் நிலை உயர வேண்டும் என்பது தான். பொறியியல், பாலிடெக்னிக் மட்டும் இல்லாமல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் திறன் பயிற்சி குறித்த அனைத்தையும் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரபட்டது. தொழிற்சாலைகளை உருவாக்குவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வமுடன் உள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறுத் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. தொழில் முதலீட்டுக் கழகம், சிட்கோ ஆகியவை திமுக காலத்தில் கொண்டு வரப்பட்டவை. அதனால் தான் கல்வித்துறை, தொழில்துறை ஆகிய இரண்டு துறைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னுரிமை அளித்துள்ளார்.
தொழில் முனைவோர்கள் அனைவரும் உங்களது தொழிற்சாலைக்கு அருகில் இருக்க கூடிய கல்லூரிகள் உடன் தொடர்பை வைத்து கொள்ளுங்கள். மாணவர்களாக படிக்கும் போதே அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்பது குறித்த எண்ணத்தை வளர வைக்க வேண்டும்.
சர்வதேச அளவில் கல்வியிலும், தொழிலிலும் முதலில் இருக்க வேண்டுமென்றால் இரண்டு துறையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
கோயம்பத்தூர், திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலை கழககத்திலேயே ட்ரோன் உருவாக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் செய்து காட்டி இருக்கிறார். இப்போது மாணவர்களே பல்கலை கழகங்களில் ட்ரோன் தயாரிக்கிறார்கள்.
திருவள்ளூர், வேலூர் பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள் உள்ளது. ஆனால் எங்கள் ஊரான விழுப்புரத்தில் இல்லை. அங்கும் இந்தாண்டு கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். படிக்கும் போதே தொழிற்சாலைக்கு சென்று பயிற்சி பெறுங்கள். மாணவர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக தொழில் துவங்குபவர்களாக மாற வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்?