சென்னை: சென்னை பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு, ஆற்று நீரில் பாய்ந்து நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழக்குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இந்த எண்ணெய் கழிவுகளின் கசிவு, எண்ணூர் பகுதி ஆற்றில் மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவியிருந்தது.
குறிப்பாக, பக்கிங்காம் கால்வாய் கலந்த எண்ணெய் கழிவு, மழைப் பொழிவின் காரணமாக கால்வாய் வழியாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது, பக்கிங்காம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் எண்ணெய் கழிவுகள் சூழ்ந்தன. இதில் சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், பாரதி நகர் என சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளிலும் எண்ணெய் கழிவு படலமாக சூழ்ந்தது.
இதையடுத்து, எண்ணெய் படலம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்மட்டக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, எண்ணெய் கசிவால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என பல கோணங்களில் மாநிலக் குழு ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், சூழல் அறிவோம் அமைப்பின் தரப்பில், அப்பகுதியில் ஆய்வு செய்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சூழல் அறிவோம் அமைப்பின் சார்பில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், "சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து தான் எண்ணெய் கழிவானது வெளியேறியுள்ளது. இந்த எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுகளை அகற்றும் பணியில் தற்போது வரை அந்த நிறுவனம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. எண்ணூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட தாவரங்கள், பறவைகள், மீன்கள், அலையாத்தி காடுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. தற்போது அவை முற்றிலும் பாதிக்கபட்டு வருகிறது. இந்த எண்ணெய் கசிவு அங்கு இருக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கும் நிலை உள்ளது.
மேலும், இந்த எண்ணெய் கழிவுகள் தற்போது, திருவொற்றியூர் வரை காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால், பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவலம், மாமல்லபுரம், கல்பாக்கம் வரை பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டும் எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிப்பு கோவலம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், இது வேகமாக பரவும் நிலை ஏற்படும். மேலும், இது நீரில் கலந்தால், அவற்றை அப்புறபடுத்துவது சவலால்கள் நிறைந்த செயலாக இருக்கக்கூடும். மேலும், எண்ணெய் கசிவில் பாலி-சைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (poly-cyclic aromatic hydrocarbons (PAHs)) என்ற ரசாயனம் கலந்து இருக்கும்.
எனவே, இந்த எண்ணெய் படர்ந்த இடத்தில் இருந்து வரும் கடலுணவுகளை உட்கொள்ளும்போது, புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், இது நீண்ட கால பாதிப்புகளான தோல் நோய், நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல பாதிப்புகளை உண்டாக்கும்.
இந்த எண்ணெய் கசிவால், இதுவரை கடலாமைகள் பாதிக்கபடவில்லை என்றாலும், ஜனவரி மாதம் கடல் ஆமைகளின் வலசை காலம் என்பதால், கிழக்கு கடற்கரையில் ஆமைகள் முட்டை போட கூடுகளை அமைக்கும். இந்நிலையில், அங்குள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றாமல் இருந்தால், அவை ஆமைகளின் இனப்பெருக்கத்தை தடுக்கும் அபயாம் உள்ளது.
எனவே, இதற்கு தீர்வாக கடலில் மற்றும் கால்வாயில் படர்ந்து இருக்கும் எண்ணெய் படலத்தை வேக்கம் பம்புகளைப் (Vacuum Pumps) பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும். மேலும் திறன் வாய்ந்த வடிகட்டிகளைப் பயன்படுத்தி, கடலில் கலப்பதை தடுக்கலாம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவில் ரூ.1,000 கொடுத்த உத்தமர்..இப்போது ரூ,12,000 நிவாரணமாக கேட்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்