சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பல பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது, இடி மின்னலுடன் மிதமான முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சென்னை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின்னர், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, 14ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி துவங்கி பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக மழைப் பெய்து வருகிறது. குறிப்பாக, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Rain Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இதனிடையே, சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பள்ளி வளாகங்களில் மழைநீர் பெருமளவு தேங்கி நிற்கின்றன. இதேபோன்ற நிலைமையே ஏனைய பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளதாகத் தெரியவருகிறது. சென்னை மாவட்டத்தில் மழை காரணமாக, சாலைகளில் சில இடங்களில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்ற நிலையில், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோடைகாலத்திற்குப் பின்னர் வந்துள்ள மழையால் குழந்தைகளை ஈரமான தரையில் நடக்க வைத்தால் நோய்த்தொற்று வருவதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எனவே, ஆங்காங்கே பள்ளிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இருப்பினும், விட்டு விட்டு மழை பெய்துவருவதன் காரணமாக தண்ணீர் தேங்கிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில், இன்று சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்துள்ளது. இதனால், பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chennai Rain Effects: சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்!