தென்னிந்திய ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், “கரோனா ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக அனைத்து மில்களும் மூடப்பட்டு உள்ளதால், தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை.
பொருளாதார ரீதியில் அனைத்து நிதி நடவடிக்கைகளும் முடங்கிப்போய் உள்ளது. இருந்தபோதிலும், தமிழ்நாடு மின்வாரியம் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழுமையாக செலுத்தும் படி நிர்பந்திக்கிறது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும், குறைந்த பட்ச உயர்மின் அழுத்தத்திற்கான 20 சதவீதத்தை மட்டும் செலுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் உயர் அழுத்த மின்சாரத்துக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அதிகபட்ச கட்டணத்தை செலுத்தச் சொல்லும் டான்ஜெட்கோவின் நடவடிக்கை சட்டவிரோதம். கரோனா தாக்கம் முடியும் வரை 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும், கூடுதலாக நிறுவனங்களிடம் வசூலித்த தொகையை வரும் மாதங்களின் மின் கட்டணத்தில் சரிபடுத்திக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளின் நிர்வாக அலுவலகங்களில் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. இந்த நடவடிக்கையால் தொழிற்சாலைகள் மூடும் நிலைமைக்கும், அழிகின்ற நிலைக்கும் செல்லும் என்பதை மின் பகிர்மான கழகம் உணர வேண்டும். அதனால், தொழிற்சாலைகளிடமிருந்து அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்கும் மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கையை பார்க்கும் போது, பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போலத்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பூஜைகள் நடத்தக் குழு அமைக்கக் கோரி மனு - இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு!