கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்ற ஆண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள்தான் பெரும் பாதிப்புகளை சந்தித்தனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்த அவர்களை மீட்டு அழைத்து செல்லும் பணியில் பலர் ஈடுபட்டனர். சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் தொழில்துறையும் இதனால ஸ்தம்பிக்கத் தொடங்கியது.
தொழில் துறையினர் அச்சம்
இந்நிலையில், முதல் ஊரடங்கைப் போலவே தங்கள் சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பினால் தங்களது உற்பத்தி பாதிக்கும் என்ற அச்சம் தொழில் துறையினர் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் ஒருவர், ”தற்போது மீண்டும் தொற்று அதிகரித்திருப்பதால் நிலையற்றதன்மை நிலவுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பயம் இருக்கிறது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்படாவிட்டாலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். இது தொழிலை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
தற்போது மஹராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் மீண்டும் முதல் பொது முடக்கத்தைப் போன்ற சூழல் திரும்பும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிறு குறு நிறுவனங்களுக்கு மீண்டும் பாதிப்பு
இது குறித்துப் பேசிய சிறு தொழில்துறை அதிபர் ஒருவர், ”தொழிலாளர்கள் பயப்படத் தொடங்கிவிட்டனர். இரவு நேர ஊரடங்கு அறிவித்தால் இரவு நேரங்களில் வேலையில் ஈடுபட முடியாது. இதனால் அவர்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களில் பணியாற்றுபவர்களில் 80 விழுக்காடு பேர் புலம்பெயர் தொழிலாளர்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் புறப்படலாம் என்ற நிலைமை உள்ளது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் இது குறித்துப் பேசுகையில், ”சம்பளம் வாங்கிவிட்டு அடுத்த நாள் வேலைக்கு வருவார்களா எனத் தெரியவில்லை. கடந்த முறை அவர்கள் இங்கிருந்து செல்ல சிரமப்பட்டது எங்களுக்குத் தெரியும். அப்போது நாங்கள் உதவி செய்தோம், இதனால் அவர்கள் மீண்டும் எங்களிடமே வருகின்றனர். ஆனால் தொழில் மெல்ல மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டால் அது பெரிழப்பாக அமையும்” என்றார்.
இதையும் படிங்க: இந்தியா உள்பட 13 நாடுகளிலிருந்து வெளியேறும் சிட்டி வங்கி!